Sunday, May 8, 2011

OPERATION TRUST - KGB - JAMES BOND

ஒப்பரேஷன் ட்ரஸ்ட்" என்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உலக இராணுவ விவகாரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு போதாது என்றுதான் கூறவேண்டும்.

ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிக முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான ஒரு நடவடிக்கைதான் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை.

ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராகப் புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் Operation Trust.

இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது உலக மட்டத்தில் ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு உளவு அமைப்பாக வலம் வந்த கே.ஜீ.பி (KGB) அமைப்பு.

சோவியத் ஒன்றியத்தின் ஆணிவேர், சோவியத் ஒன்றியத்தின் கண்கள், சோவியத்தின் மூளை என்கின்றதான பல அடையாளங்களுடன் மிகவும் வெற்றிகரமாக வலம்வந்த உளவு அமைப்பு - கே.ஜீ.பி. உளவு அமைப்பு.

புலம்பெயர்ந்த ஒரு தொகுதி ரஷ்ய பிரஜைகளால் சோவியத்தின் கமியூனிச ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ள ஒரு மிகப் பெரிய புரட்சியை முற்காகவே கிள்ளி எறிவதற்காக கே.ஜீ.பி. உளவு அமைப்பு மேற்கொண்ட ஒரு இரகசிய உளவு நடவடிக்கைதான் Operation Trust.
.

(அந்த நேரத்தில் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பு OGPU என்ற பெயரில்தான் செயற்பட்டுவந்தது. பின்நாட்களில்தான் கே.ஜீ.பி. என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் பின்னாட்களில் பிரபல்யமான கே.ஜீ.பி. என்ற பெயரையே பரிட்சயம் காரணமாக இந்தக் கட்டுரையில் பாவிக்கின்றேன்)

ரஷ்யப் புரட்சி முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ரஷ்யாவில் மன்னராட்சியை உருவாக்கும் நோக்கோடு ஒரு புரட்சிகர அமைப்பு உருவானது. அதன் பெயர் Monarchist Union of Central Russia (MUCR). 1921ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கம், ரஷ்யாவில் எப்படியும் மீண்டும் மன்னராட்சியை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு போராடி வந்தது. சோவியத் ஒன்றியம் முழுவதிலும் அப்போதைய போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த பல்வேறு இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு மிகவும் மும்முரமான போராட்டத்தை மேற்கொண்டுவந்தது இந்த MUCR அமைப்பு.

இந்த நேரத்தில்தான் கே.ஜீ.பி. ஒரு இரகசிய ஒப்பரேஷனை மேற்கொண்டது.

மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, நிதானமாக, மிகவும் இரகசியமாக காய்களை நகர்த்தியது.

கே.ஜீ.பி. இனது நோக்கமும், திட்டமும் வெறும் MUCR இயக்கத்தை முடக்குவது மாத்திரமல்ல. அதனையும் தாண்டி நீண்ட, விரிந்த திட்டத்தைத் தீட்டியது கே.ஜீ.பி.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போர்க்கொடி துக்கியிருந்த அனைத்து இயக்கங்களையும் கூண்டோடு அழித்துவிடத் திட்டம் தீட்டியது. அது மாத்திரமல்ல. சோவியத்தில் இருந்து வெளியேறி மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கிருந்தபடி போராடிவரும் அமைப்புகளுக்கும் சேர்த்து வலை விரித்தது கே.ஜீ.பி..

நுணுக்கமானதும், மிகவும் கஷ்டமானதுமான ஒரு உளவுச் சதி. ஆனாலும் அதனை வெற்றிகரமாக மேற்கொண்டு பிபல்யமான ஒரு உலகசாதனை படைத்தது கே.ஜீ.பி.
இந்த இரகசிய உளவு நடவடிக்கைக்கு கே.ஜீ.பி. சூட்டிய பெயர் Operation Trust.

முதலில் அந்த புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சுதந்தியரமாகச் செயற்படவிட்டார்கள். அழைத்துப் பேசினார்கள். பகிரங்கமாக ஆர்ப்பாட்டம் செய்ய, கூட்டம் கூட, கருத்துக்கூறவெல்லாம் அனுமதித்தார்கள். தீடீரென்று ஒருநாள் ஒட்டுமொத்தமாக அனைத்து செயற்பாட்டாளர்களையும், தலைமையையும் கைதுசெய்தார்கள்.

ஆனால் இந்த கைது விவகாரம் வெளியே யாருக்குமே தெரியாது.

காதும் காதும் வைத்தாற்போன்று அனைவரையும் பிடித்து உள்ளேபோட்டுவிட்டு, கே.ஜீ.பி.ஏஜன்டுக்கள் MUCR இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போன்று செயற்பட ஆரம்பித்தார்கள். கைதுசெய்யப்பட்ட MUCR இயக்கத் தலைமைகளையும் மிட்டி, சித்திரவதை செய்து பணிய வைத்து தங்களது கைப்பாவைகளாக செயற்பட வைத்தார்கள். (மனைவி, பிள்ளைகளை இரகசியச் சிறைகளில் பணயம் வைத்துக்கொண்டு, தாம் சொல்கின்றபடி நடந்தாகவேண்டும் என்று மிரட்டினால் பாவம் அந்த இயக்க உறுப்பினர்களால் வேறு என்னதான் செய்யமுடியும்?)

MUCR இயக்கத்தினரைப் போன்று வேடமணிந்து செயற்பட்ட ஆரம்பித்த கே.ஜீ.பி. உறுப்பினர்கள், முன்னர் இருந்த MUCR இயக்கத்தைவிட இன்னும் வேகமாக புரட்சி பேசினார்கள். செயற்பட்டார்கள். வெற்றிகரமாகச் சில தாக்குதல்களைக்கூட மேற்கொண்டார்கள். அத்தோடு, சோவியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபடி ரஷ்யாவிலும், வேறு பல நாடுகளிலும் செயற்பட்டு வந்த மற்றைய அமைப்புக்களுக்கு நிதி உதவிகளும், வேறு பல உதவிகளும் செய்யத் தலைப்பட்டார்கள்.

இது, MUCR இயக்கம் என்ற பெயரில் செயற்பட்ட கே.ஜீ.பி. உளவு அமைப்பிற்கு சோவியத் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்ட அனைத்து தரப்பினர் பற்றிய முழு விபரங்களையும் திரட்டுவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது.

விபரங்களைத் திரட்டினார்கள். முக்கியமானவர்களைக் கைதுசெய்தார்கள். கைதுசெய்ய முடியாதவர்களை படுகொலை செய்தார்கள். பல்வேறு இயக்கங்கள் மத்தியிலும், இயக்கங்களுக்கு உள்ளேயும் கூட பிழவுகளை ஏற்படுத்தினார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் சோவியத் ஒன்றியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த அனைத்து இயக்கங்களையும் முடக்கிவிடுவதில் கே.ஜீ.பி. உளவு அமைப்பு வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் இந்த ஒப்பரேஷனைப் பொறுத்தவரையில் கே.ஜீ.பி. உளவு அமைப்பிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பது, அவர்கள் சோவியத்தில் மாத்திரமல்லாமல் மேற்குலக நாடுகளில் செயற்பட்டு வந்த பல்வேறு இயக்கங்களையும், செயற்பாட்டாளர்களையும் ஒடுக்குவதின் ஊடாகத்தான் கிடைத்தது.

ஆம், சோவியத் ஒன்றியத்தில் மாத்திரமல்ல ரஷ்யர்கள் புலம்பெயர்ந்து செயற்பட்ட மேற்குல நாடுகளிலும் கூட, கே.ஜீ.பியின் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது.

ரஷ்யாவில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்து தஞ்சம் அடைந்த சில கே.ஜீ.பி. ஏஜன்டுக்கள், தம்மை ஆருஊசு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெளிக்காண்பித்து நடித்துக்கொண்டு சோவியத் அரசிற்கு எதிராக புரட்சி பேசினார்கள். தம்மை தீவிரவாதிகளாக வெளிக்காண்பித்துக்கொண்டு சோவியத் ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வதாகப் ‘பவ்லா’ காண்பித்தார்கள். புலம்பெயர் நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்டுக்கொண்டிருந்த பல்வேறு சக்திகளையும் ஒன்றுதிரட்டி சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியைத் தாம் வீழ்த்தப் போவதாக அறைகூவல் விடுத்தார்கள்.

சோவியத்தில் இருந்து புலம்பெயர்ந்து பலநாடுகளிலும் சோவியத் ஆட்சிக்கு எதிராகக் கொதித்துக்கொண்டிருந்த பல இளைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பெரும் பணக்காரர்கள், ஊடகவியலாளர்கள் இந்த MUCR இயக்கத்தின் வெளிநாட்டுப் பிரிவுடன் சேர்ந்து செயற்பட முன்வந்தார்கள். பலவிதமான உதவிகள் ஒத்தாசைகளை வழங்கினார்கள். பணத்தை அள்ளி இறைத்தார்கள். ஆருஊசு என்ற அந்தப் புரட்சிகர அமைப்பைப் பயன்படுத்தி எப்படி சோவியத் ஆட்வியைக் கலைக்கலாம் என்று திட்டம் தீட்டினார்கள்.

ஆனால் MUCR இயக்கம் என்ற பெயரில் செயற்பட்ட சோவியத்தின் உளவுப் பிரிவினரோ மிகவும் கவனமாகச் செயற்பட்டு ஒரு பெரிய உளவுச் சதியை அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.
அந்த உளவுச் சதி, உலகின் போரியல் வரலாற்றில் மிகவும் உறுதியாகப் பதியப்படும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய வெற்றியை சோவியத்தின் உளவுப் பிரிவான கே.ஜீ.பிக்குப் பெற்றுக்கொடுத்தது.

இப்பொழுது ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பார்ப்போம்.

எங்கள் அனைவருக்கும் ஜேம்ஸ் பொண்ட் 007 என்ற சினிமா காதாபாத்திரத்தை நன்றாகத் தெரியும். இந்த ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரம் ஒரு பிரித்தானிய இரகசிய உளவாளி. மிகப் பெரிய வீர சாகசங்களை தனி ஒருவனாகச் செய்வதில் வல்லவனாக இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. ஜேம்ஸ் பொண்ட் 007 என்ற வீர கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளரின் பெயர் இயான் பிளேமிங் (Ian Fleming). தனது இந்த ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரம் பற்றி இவர் பின்நாட்களில் கருத்துத் தெரிவிக்கும் பொழுது, 'சிட்னி ரெய்லி (Sidney Reily) என்ற ஒரு பிரித்தானிய உளவாளியின் உண்மையான வீர சாகசம்தான் என்னை ஜேம்ஸ் பொண்ட் 007 கதாபாத்திரத்தை உருவாக்க வைத்தது. இந்த பிரித்தான உளவாளியையும், அவனது சாகசங்களையும் அடிப்படையாக வைத்துத்தான் நான் ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்" என்று தெரிவித்திருந்தார்.

அந்த அளவிற்கு பிரபல்யமான இந்த சிட்னி ரெய்லி என்ற பிரித்தானிய உளவாளி உண்மையிலேயே ஒரு ரஷ்யர். ரஷ்யாவில் பிறந்த இவர் ஏதோ காணத்திற்காக ரஷ்ய ஆட்சியை வெறுக்கத் தொடங்கினார். சிறு வயதிலேயே தனது குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். பிரித்தானியாவின் இரகசியப் பொலிஸ் பிரிவில் இணைந்து இவர் செய்த சாகசங்கள் கொஞ்சநஞ்சமல்ல. உளவாளியாக ரஷ்யாவிற்குச் சென்று அங்கிருந்து பலவிதமாக இரகசியங்களைத் திருடி பிரித்தானியாவிற்கு கொண்டு வந்து பல சாதனைகளைப் புரிந்தார்.

அந்தக் காலகட்டத்தில் ரஷ்யா என்பது உலகைப் பொறுத்தவரையில் ஒரு இரும்புத் திரையின் பின்னால் இருந்த ஒரு தேசம். அங்கு என்ன நடக்கின்றது என்று உலகில் யாருக்குமே தெரியாது. அப்படிப்பட்ட ரஷ்யாவிற்குள் பல்வேறு வேஷங்களில் நுழைந்து, அங்கிருந்து இரகசியங்களைத் திருடுவதும், அந்த இரகசியங்களை பிரித்தானியாவுக்குக் கடத்தி வருவதும் இலகுவான ஒரு காரியமல்ல. ஆனால் அதனைச் சாதித்துக் காட்டினார் சிட்னி ரெய்லி.

அது மாத்திரமல்ல அப்பொழுது இருந்த லெனினின் ஆட்சியைக் கலைத்துவிட்டு சிட்னி ரெய்லியை அதிபராக்கும் இரகசியச் சதித்திட்டமும் பிரித்தானியாவிடம் இருந்தது. அந்த நோக்கத்திலும் பல காய்கள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்தன ரஷ்யாவில்.

சோவியத்தின் இராணுவத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தில்; சிட்னி ரெய்லி என்ற இந்த மோசமான உளவாளி பற்றி தெரியவந்த பொழுது, ரஷ்யாவில் தங்கியிருந்த அவர் மிகவும் சாதூர்யமாகத் தப்பி பிரித்தானியா வந்து சேர்ந்தார். மிகவும் பாதுகாப்பாக அங்கு அமர்ந்தும் கொண்டார். அதன் பின்னர் பிரித்தானியாவில் இருந்தபடியே ரஷ்யாவின் ஆட்சியைக் கவிழ்க்கும் சதிவேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்.

இந்த சிட்னி ரெய்லியை கைதுசெய்ததுதான் Operation Trust என்ற இராணுவ நடவடிக்கையின் மிகப் பெரிய வெற்றி என்று வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.
எப்படிக் கைதுசெய்தார்கள்?

கைது செய்யவில்லை, ஒரு வகையில் சதி செய்து கடத்திச் சென்றார்கள் என்று கூறலாம்.

லெனினின் ஆட்சியை எப்படிக் கவிழ்ப்பது என்று சதா சிந்தித்துக்கொண்டிருந்த சிட்னி ரெய்லிக்கு, ஆருஊசு என்ற புரட்சிகர அமைப்பின் ஐரோப்பிய வருகை பற்றிய செய்தி இனிப்பாகக் கிடைத்தது. அந்த அமைப்பைத் தொடர்புகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

மிகவும் சந்தோஷம் என்று அவரை கைகுலுக்கி வரவேற்றது ஆருஊசு இனது ஐரோப்பியப் பிரிவு.

MUCR என்ற பெயரில் ரஷ்யாவின் கே.ஜீ.பி. உறுப்பினர்கள்தான் அங்கு வந்திருக்கின்றார்கள் என்று சிட்னி ரெய்லிக்குத் தெரியாது. தானாகவே சென்று வலையில் வீழ்ந்தார். லெனினின் ஆட்சியை எப்படி வீழ்த்தலாம் என்று அவர்களுடன் சேர்ந்து நுணுக்கமாகத் திட்டம் தீட்டினார்.

ஆனால், இங்கே லண்டனில் அமர்ந்துகொண்டு லெனினை வீழ்த்துவது எப்படி? ரஷ்யாவில் ஆட்சிதான் அமைப்பது எப்படி? அதற்கு ரஷ்யாவிற்கு நேரில் போகவேண்டும் அல்லவா?

'ரஷ்யாவில் மிகவும் பலமாகச் செயற்படும் எங்களது உறுப்பினர்களூடாக உங்கள் இரகசியப் பயணத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்து தருகின்றோம்" என்றது MUCR இனது ஐரோப்பியப் பிரிவு. 'நீங்களே நேரடியாகச் சென்று ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் பற்றி விளக்கிச்சொன்னால் அங்குள்ள எங்கள் உறுப்பினர்களுக்குத் தெம்பாக இருக்கும்.. மேலும் உற்சாகமாகச் செயற்படுவார்கள்.." சிட்னி ரெய்லிக்கு ஐடியா கொடுத்தார்கள் MUCR இனது ஐரோப்பியப் பிரிவு.

ரஷ்யாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு என்று மிகவும் இரகசியமாகப் புறப்பட்ட சிட்னி ரெய்லி, ரஷ்யாவில் பகிரங்கமாகக் கைது செய்யப்பட்டார். அவரை ரஷ்யாவிற்கு இரகசியமாக அழைத்துச் சென்ற கே.ஜீ.பி. உறுப்பினர்களே, ரஷ்ய எல்லையை அடைந்ததும் அவரைக் கைதுசெய்தார்கள். சித்திரவதைகள், விசாரணை, துப்பாக்கிச் சூடு என்று மிகவும் சோகமாக முடிவடைந்தது பிரபல்யமான, திறமையான ஒரு வீரனின் வாழ்க்கை.

அது மாத்திரமல்ல, இவர் போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் ரஷ்ய ஆட்சிக்கு எதிராகச் செயட்பட்டுக் கொண்டிருந்த பல புரட்சியாளர்கள், தேசப்பற்றாளர்கள், தேசியவாதிகள் ஏமாற்றப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். காணாமல் போணார்கள், கடத்தப்பட்டார்கள். செயலிழக்க வைக்கப்பட்டார்கள்.

இதுதான் Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை.

உலக அளவில் மிகவும் வெற்கரமான ஒரு உளவு நடவடிக்கை.

nandri

neraj david

No comments: