சென்னை, ஜூன் 9: கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என அதிமுக சார்பில் 2008-ல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் வருவாய்த்துறை தன்னையும் இணைத்துக் கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைக்கு எதிராக மற்ற நாடுகளுடன் சேர்ந்து இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கடுத்த நாளில் தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது தொடர்பாக இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
தீர்மான விவரம்: ""இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அன்னிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்'' என 1960-ல் உச்ச நீதிமன்றம் பெருபாரி வழக்கில் தீர்ப்பு அளித்தது.
ஆனால் இதற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கை இடையே 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானிக்கிறது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இந்தத் தீர்மானத்தை முழு மனதோடு வரவேற்பதாகக் கூறினார்.
இத் தீர்மானத்தின் மீது கருத்து கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசு இரண்டாவது முக்கியமான மைல்கல்லாக இருக்கும் வகையில் இத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார். இந்தப் பிரச்சினைக்காக இந்த பேரவையிலேயே ஒரு தீர்மானம் கொண்டு வரலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் எஸ்.பி. முத்துக்குமரன் (புதுக்கோட்டை) : தமிழக மீனவர்களுக்கு யார் பாதுகாப்பு தர முடியும் என்ற ஏக்கம் இருக்கும் சூழ்நிலையில் இத் தீர்மானம் கூடுதல் பலமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மீன்பிடித் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதை இந்த ஒரு தீர்மானம் மூலமாகத்தான் செய்ய முடியும் என்றார் அவர்.
ஏற்கெனவே தமிழக மீனவர்கள் சென்ற எல்லை வரை மீண்டும் செல்ல இந்தத் தீர்மானம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என மார்க்சிஸ்ட் குழு தலைவர் அ. சவுந்திரராஜன் கூறினார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1983 தமிழ்நாடு கடல்வள மீனவர் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, கச்சத்தீவு எல்லை மாற்றி குறிப்பிடப்பட்டதும் இப்போதைய சங்கடங்களுக்கு காரணம் என்பதால் அந்தச் சட்டத்தையும் திருத்த வேண்டும் என ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) கேட்டுக் கொண்டார்.
முதல்வரின் பதிலுரைக்குப் பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இந்தத் தீர்மானத்தின் மீது காங்கிரஸ், பா.ம.க.வினர் கருத்து எதுவும் கூறவில்லை. இரு கட்சிகளின் உறுப்பினர்களும் அப்போது பேரவையில் இருந்தனர்.
திமுக உறுப்பினர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வரை சட்டப்பேரவை வளாகத்தில் இருந்தனர். ஆனால் கூட்டம் தொடங்கியபோது யாரும் உள்ளே வரவில்லை.
உள்ளே வராததற்கான காரணம் குறித்து அக் கட்சியின் குழு தலைவர் ஸ்டாலின் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் விளக்கினார்.
nandri : dinamani
No comments:
Post a Comment